சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாநில, மாவட்ட, சர்வதேச அளவில் வெற்றிபெற்று பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
டெல்லியிலிருந்து சிவகங்கை வந்துசேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கத்தில் சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
முன்னதாக அனைத்து மாணவர்களின் வரவேற்பு பேரணியாக பேண்டு வாத்தியங்கள் முழங்க வெற்றிபெற்ற வீரர்கள் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இது குறித்து பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் கூறியதாவது,
சிவகங்கை மாவட்டம் வீர விளையாட்டுகளுக்கு பெயர் பெற்ற மாவட்டம் ஆகும். அத்தகைய பெருமைக்கு வலுசேர்க்கும் வகையில் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துவித விளையாட்டு பயிற்சிகளும் தகுந்த பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் சதுரங்கம், வில்வித்தை, கராத்தே, யோகா, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான வெற்றிப்பதக்கங்களை எங்கள் பள்ளி மாணவர்கள் ஆண்டு தோறும் பெற்று வருகின்றனர். சமீபத்தில் வாக்கோ இந்தியா சார்பில், டெல்லி KD ஜாதவ் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்ற வீரர்களுடன் தமிழக அணி சார்பாக 61 வீரர்கள் களமிறங்கினர். அதில் சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் பயிற்சி பெற்ற எமது பள்ளி மாணவர்கள் விஸ்வகிரிஷ் – 47கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ருத்வின் பிரபு – 27கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றனர். மேலும் ஈரோட்டில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டிகளில் எமது மாணவர்கள் ஶ்ரீமுகில் தங்கப்பதக்கமும், மணீஷ்சர்மா வெள்ளிப்பதக்கமும் பெற்றுவந்துள்ளனர். இவ்வாறு மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 50% கல்வி உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றோம். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட வெற்றி வீரர்கள் எங்கள் பள்ளி நிர்வாகத்தின் கல்வி உதவித்தொகை பெற்று பலன் அடைந்து வருகின்றனர். மாணவர்களின் வெற்றிகளுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர்களையும், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களையும் இந்த நேர்த்தில் கௌரவிப்பதில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.” என்றார்.
தமிழகத்திற்கும், இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வெற்றிபெற்ற சிவகங்கை பள்ளி மாணவச் செல்வங்களுக்கு நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் தனது சொந்த செலவில் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். விழாவில் சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கிக்பாக்ஸிங் சங்க செயலாளர் குணசீலன், தலைவர் சதீஷ், துணைச்செயலாளர் சித்ரா, இணைப்பயிற்சியாளர் விக்னேஷ், வில்வித்தை பயிற்சியாளர்கள் சுரேஷ், அரவிந்த் குமார் ஆகியோர்களும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் செல்வ முருகன், மீனாள் அபிராமி, ராம பிரபு, வைஷ்ணவி, பகவான்,
பாக்கியலட்சுமி, ராஜேந்திரன்,
புனிதா, ராதா கிருஷ்ணன், கார்த்திகாயினி ஆகியோர் அனைவரும் சிவகங்கை நகர்க்காவல் ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டனர். IAS ஜூனியர் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவி டெலிஷா நன்றியுரை கூறினார்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நகர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பாலமுருகன், மேலாளர் தியாகராசன், உடற்கல்வி ஆசிரியர் தினேஷ் குமார், அலுவலர் தனபாலன் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.


