சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் எடப்பாடி பழனிசாமியும் தானும் இணைந்து கட்சியை நடத்த தயாராக இருக்கிறேன். தொண்டர்களையும் , கட்சியையும் மனதில் வைத்து , மனக்கசப்புகளை மறந்து மீண்டும் ஒற்றுமையாக இணைந்து செயல்படலாம் என அழைப்பு விடுத்தார். அதுமட்டுமின்றி சசிகலா, தினகரன் உள்ளிட்டோரும் கட்சிக்கு வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வோம் என்றும் அவர் கூறினார். இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அழைப்பை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஓபிஎஸ் பதவிக்காக மட்டுமே இப்படி பேசுவதாகவும், கட்சிக்காக அவர் கொஞ்சமும் உழைக்க வில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்றும் பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே” என்று குறிப்பிட்டுள்ளார்.