சென்னையில் டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட புறப்பட்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்பு திடீர் சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, அதனைக் கண்டித்து இன்று (மார்ச் 17) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு வெளியே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இப்போராட்டத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக தலைவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும், போராட்டம் அறிவிக்கப்பட்ட சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், தாளமுத்து நடராஜர் மாளிகை, டாஸ்மாக் தலைமை அலுவலகம், பாஜக முக்கியத் தலைவர்களின் வீடு என பல்வேறு இடங்களிலும் சுமார் 500 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் வசிக்கும் சாலிகிராமம் இல்லம் முன் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். அவர், ஆர்ப்பாட்டத்திற்காக வீட்டை விட்டு கிளம்பிய நிலையில், அங்கேயே கைது செய்யப்பட்டு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் போராட்டத்தில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டபோது கைது செய்யப்பட்டார். இதுபோல பாஜக தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.