கோமியம் குறித்த ஐஐடி இயக்குநர் காமகோடி பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
சென்னை மேற்குமாம்பலத்தில் உள்ள கோசாலையில், சமீபத்தில் நடந்த மாட்டுப்பொங்கல் விழாவில் ஐஐடி இயக்குநர் காமகோடி, கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என பேசியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கு கண்டணம் தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், “மாட்டின் கோமியத்தை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில், “ஐஐடி போன்ற மிகச்சிறந்த கல்லூரியின் இயக்குநர் இப்படி பேசியிருப்பது வருந்தத்தக்கது. மாட்டின் கோமியம் உடலுக்கு கேடு என்று சொல்லிவரும் அறிவியல்பூர்வமான இந்த காலத்தில், அறிவியல் ரீதியான ஒரு கல்லூரின் இயக்குநர் இப்படி சொல்லியிருப்பது ஏன் என்று புரியவில்லை. கல்லூரி இயக்குநர் ஆளுநர்போல் ஆகிவிட்டார் என தெரிகிறது” என பேசியிருந்தார்.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், போலி அறிவியலை ஊக்குவிக்கும் வகையில் பேசிய ஐஐடி இயக்குநர், அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமற்றவர் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் “சென்னை ஐஐடி இயக்குநர் அவருடைய துறையில், குறிப்பாக குவாண்டம் கம்ப்யூட்டிங் ஏஐ-யில் பெரிய நிபுணராக இருக்கிறார். ஐஐடி-யில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் பெரிய பொறுப்பில் நாட்டை பாதுகாப்பதில் வல்லுநராக இருக்கிறார். அவர் சார்ந்திருக்கும் மதத்தின் மீது பிடிப்பு இருப்பது, பாராயணம் பாடுவது, பசு மாடுமீது நம்பிக்கை வைத்திருப்பது தவறு கிடையாது இதெல்லாம் அவருடைய கோட்பாடு.
அவர் வகுப்பறையில் பாடம் எடுத்து கோமியத்தை குடியுங்கள் என்று சொல்லவில்லையே, தனிப்பட்ட கோட்பாட்டைத்தான் சொல்லியிருகிறார். அவர் செய்து வரும் வேலைகளை மறந்து ஒரு கருத்தை மட்டும் பிரதானமாக வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். அவர் தமிழரின் அடையாளம். எனக்கு அவரை தனிப்பட்ட முறையிலும் அவர் செய்த சாதனைகள் பற்றியும் தெரியும். அதனால் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்காதீர்கள் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்” என்று கூறினார்..