• Tue. May 7th, 2024

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு..!

Byவிஷா

Nov 18, 2023

தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக செயல்பட்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். பொறியியல் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் முதல் தேர்வு கட்டணம், டிகிரி சான்றிதழ் கட்டணம் வரை நிர்ணயம் செய்கிறது
முன்னதாக அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வு கட்டணம் ஒரு பாடத்திற்கு 150 என கடந்த 2014ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டு தற்போது வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. செய்முறை தேர்வு கட்டணம் 300 ரூபாய் என்றும், முதுகலை செய்முறை தேர்வு கட்டணம் 450 ரூபாய், டிகிரி சான்றிதழ் பெற 1000 ரூபாய் எனவும், இறுதியாண்டு புராஜெக்ட்டிற்கு 600 ரூபாய் என்றும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த கட்டணமானது, சில தினங்களுக்கு முன்னர் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன்படி, தேர்வு கட்டணம் ஒரு பாடத்திற்கு 225 எனவும், செய்முறை தேர்வு கட்டணம் 450 ரூபாய் என்றும், முதுகலை செய்முறை தேர்வு கட்டணம் 650 ரூபாய், டிகிரி சான்றிதழ் பெற 1500 ரூபாய் எனவும், இறுதியாண்டு புராஜெக்ட்டிற்கு 900 ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டு அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த 50 சதவீத உயர்வு என்பது மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த கட்டணம் உயர்த்தப்படுவது நிறுத்தப்படுவதாக ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜூம் இந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது..,
அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணமானது 2014இல் தான் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 9 ஆண்டுகள் தேர்வு கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது செலவுகள் அதிகமாக இருப்பதால் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு பேப்பரையும் திருத்துவதற்கு ஆசிரியர்கள் அதிக கட்டணம் கேட்கிறார்கள். கடந்த 9 வருடத்தில் 100 சதவீதம் கட்டணம் உயர்த்தி இருக்க வேண்டும். ஆனால் 50 சதவீதம் மட்டுமே உயர்த்தி உள்ளோம்.
ஜனவரி மாதமே இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து மே மாதம உயர் பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டது. கடந்த மாதம் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி தற்போது கட்டண உயர்வு இந்த செமஸ்டருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 4 மாதத்திற்கும் முன்னர் அமைச்சர் பொன்முடி தலைமையில், எல்லா பல்கலைக்கழக துணை வேந்தர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோம்.
அப்போது எல்லா கல்லூரிகளிலும் ஒரே தேர்வு கட்டணம விதிக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. தற்போது இந்த செமஸ்டரில் பழைய மாதிரியான தேர்வு கட்டணமே வசூலிக்கப்படும். ஒருவேளை புதிய கட்டணத்தை மாணவர்கள் அளித்து இருந்தால், அதனை திரும்ப வாங்கி கொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *