மதுபான ஊழலால் அர்விந்த் கேஜ்ரிவாலின் பிம்பம் சிதைந்தது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் , 43 தொகுதிகளில் முன்னிலை வகித்து ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தல் குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் கூறுகையில் “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் நல்ல குணம், சிறந்த யோசனைகள் இருக்க வேண்டும். தூய்மையான நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும். இதை நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன். ஆனால், ஆம் ஆத்மிக்கு அது புரியவில்லை. அவர்கள் மதுபான ஊழலில் சிக்கிக்கொண்டனர். இதனால் அர்விந்த் கேஜ்ரிவாலின் பிம்பம் சிதைந்தது. அதனால்தான் தேர்தலில் அவர்களுக்கு வாக்குகள் குறைவாகவே கிடைக்கின்றன. அரசியலில், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். ஒருவர் தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.




