• Mon. Apr 29th, 2024

அதிமுக உடன் இணைந்து அஞ்சுகிராமம் வியாபாரிகள் சங்கமும் கண்டன ஆர்ப்பாட்டம்.., தளவாய்சுந்தரம் பங்கேற்பு…

அஞ்சுகிராமம் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி, வியாபாரிகள் அஞ்சுகிராமம் பாரிகள் நல சங்கம் ஆர்ப்பாட்டம். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு.
அஞ்சுகிராமம் ஜன-28 அஞ்சுகிராமம் டூ நாகர்கோவில் சாலையை சீரமைக்க கோரி அஞ்சுகிராமம் வியாபாரிகள் நலசங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வியாபாரிகள் நல சங்க தலைவர் வஸீம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராஜலிங்கம், பொருளாளர் கனகராஜ், ஊர் நல சங்க தலைவர் ஹிட்லர், ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய நிர்வாககுழு தலைவர் வாரியூர் நடராஜன், ராஜா ரெஸ்டாரண்ட் மிக்கேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசும்பொழுது,

கடந்த நாட்களில் பெய்த கன மழையில் அஞ்சுகிராமம் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். சாலைகள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளபாதிப்புகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எனது தலைமையில் பார்வையிட்டனர். பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற வேண்டும் என கோரிக்கையும் வைக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 45 நாட்கள் ஆகியும் சாலைகளில் உள்ள குண்டு, குழிகள் நிரப்பப்படாமல் ஜல்லிகள் பெயர்ந்து, மண் மேடுகளாகவும், மழை காலங்களில் சகதியாகவும் உள்ளது.

பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு உள்ளது. மேலும் சாலையில் உள்ள மண் காற்றில் கலந்து வியாபார நிறுவணங்களுக்குள் செல்வதால் பொருள்கள் நாசமாகி விடுகிறது. ஹோட்டல்களில் உள்ள தின்பண்டங்கள் கெட்டு போய்விடுகிறது. பொதுமக்கள்,மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூசிகளினால் மாசு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சாலையை சீர் செய்யக்கோரி நேரிலும் தபாலிலும் பல முறை அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கமிஷன் அடிப்பதிலேயே கவனமாய் திமுகவினர் உள்ளனர். இந்தியாவிலே சாலை பாதுகாப்பு இல்லாத முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மேலும் ஊரில் உள்ள சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்து சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. பொதுமக்களை பற்றி எந்த கவலையும் கிடையாது. சாலை பணியை அமைச்சர் வந்து தொடங்கி வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சீரமைக்கும் பணி தள்ளி போகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலையை சீரமைப்பு செய்யாவிட்டால் வியாபாரிகள் மற்றும் பொது மக்களை ஒன்று திரட்டி மாபெரும் சாலை மறியல் போராட்டம் அதிமுக சார்பில் நடத்தப்படும் என தெரிவித்த கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பசலியான் நசரேயனும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *