• Sun. Mar 26th, 2023

ஆண்டிபட்டி–தேனி அகல ரயில் பாதை சோதனை ஓட்டம்!

By

Sep 3, 2021 ,

மதுரை – போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில் ஏற்கனவே 58 கி.மீ. தூரமுள்ள மதுரை – ஆண்டிபட்டி ரயில் நிலையங்களுக்கிடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு பணிகளை முடித்துள்ளார். அதன் பின்னர் ஆண்டிபட்டி – தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 17 கி.மீ. தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

தற்போது தேனி வரையிலான புதிய அகல ரயில் பாதையில் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை ,நான்குமுறை 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் தெற்கு ரயில்வே கட்டுமான இணைப் பொறியாளர் சூரியமூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது.

இந்த சோதனை ஓட்டத்திற்கு பிறகு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் இந்த செப்டம்பர் மாதத்திற்குள் ஆய்வு நடத்த இருக்கிறார். இந்த திட்டத்தில் மீதமுள்ள 15 கிலோமீட்டர் தேனி – போடிநாயக்கனூர் பிரிவில் அகல ரயில் பாதை பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது .எனவே அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும்போது ரயில் பாதையை கடக்கவோ, அருகில் செல்லவோ வேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *