• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்டி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் இருப்பவர் பிரேமா ( 93 ) . இவர் திருமணம் ஆகாத நிலையில் தனியே வசித்து வந்துள்ளார். இவரது தந்தை துரைராஜ் செட்டியார் என்பவர் முன்னாள் பிரிட்டிஷ் காலத்தில் செயல்பட்ட பஞ்சு மில்லில் ( ஹார்வி மில்) பஞ்சு வாங்கி தரும் புரோக்கர் ஆகவும் வேலைக்கு ஆட்கள் சேர்த்து விடுபவராகவும் இருந்து வந்ததால் மிகப்பெரிய செல்வந்தராக இருந்துள்ளார். உறவினர்களுக்கும் இவருக்கும் சொத்து பிரச்சனை இருந்ததாக தெரிய வருகிறது. இதனால் இவர் இந்த வீட்டின் முதல் மாடியில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தினமும் அக்கம் பக்கத்தினருடன் வெளியே அமர்ந்து பேசி வந்த பிரேமா கடந்த 3 நாட்களாக காணவில்லை என்பதாலும் வீடு உள்பக்கமாக பூட்டி இருந்ததாலும் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல்துறை உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் முதல் மாடியின் தரைப்பகுதி இடிந்து தரைத்தளத்தில் கீழே விழுந்து இடிபாடுகளில் சிக்கி கிடந்துள்ளார்.

93 வயது மூதாட்டி மேலிருந்து கீழே விழுந்த அதிர்ச்சியில் குரல் எழுப்ப முடியாமலும் இடுபாடுகளில் இருந்து மீள முடியாமலும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியற்ற அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 93 வயது மூதாட்டி 3 நாட்களாக இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.