கூடலூர் பாடந்துறை கிராமம் புளியம்பாறை பகுதியில் மீண்டும் காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் பலியானார். காட்டு யானை தாக்கி மனித உழைப்பு உயிரிழப்புகள் தொடர்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கூடலூர் தாலுகா தேவாலா வாளவயல் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி (வயது 56) என்பவர் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தால் தேவாலா பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதனை தொடர்ந்து பிஎம். 2 அரிசி ராஜா காட்டு யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் கூடலூர் பாடந்துறை கிராமத்தில் புளியம்பாறை பகுதியில் விறகு சேகரிக்க சென்ற கல்யாணி (56) என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பெண்ணை தாக்கி கொன்றது பிஎம்.2 அரிசி ராஜா காட்டு யானையா அல்லது வேறு யானையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி
