• Mon. Aug 8th, 2022

அகில இந்திய அளவில் இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்..!

Byவிஷா

Mar 29, 2022

மத்திய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது, மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், மோட்டார் வாகனச் சட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
இதனை ஏற்று நாடு முழுவதும் நேற்று (மார்ச் 28) பாரத் பந்த் நடைபெற்றது. கேரளா, ஆந்திரா மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வேலைநிறுத்த போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.
தமிழகத்தைப் பொருத்தவரை நேற்று 32 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். அதுபோன்று குறைந்த அளவிலான ஆட்டோக்களே இயக்கப்பட்டன. அதிலும் கட்டணம் அதிக அளவு வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை நேற்று அதிகரித்தது. மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததையும் காணமுடிந்தது. நேற்று மார்ச் 27ஆம் தேதி இரவு 9 மணி நிலவரப்படி மெட்ரோ ரயில்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 867 பேர் பயணம் செய்துள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாகச் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் வளாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச்செயலாளர் துரைபாண்டியன் கூறுகையில்,
“நாடு முழுவதும் 25 கோடி ஊழியர்களும், தமிழகத்தில் லட்சக்கணக்கான ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழங்கவேண்டிய 37,500 கோடி ரூபாய் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
எங்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் டெல்லியில் அனைத்து தொழிற்சங்கங்களும் விரைவில் ஒன்று கூடி மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.
அதுபோன்று சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் அருகே அனைத்து தொழிற் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் நடத்தப்பட்டது. இதில் திமுக தொழிற்சங்கமான தொமுச பொருளாளர் கி.நடராஜன், ஏஐடியுசி நிர்வாகி மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடராஜன்,
“தொழிலாளர் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், புதிய மின்சார சட்ட மசோதாவைக் கைவிட வேண்டும், எல்ஐசி பங்குகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை தொழிலாளர் வர்க்கம் ஓயாது” என்று தெரிவித்தார்.
நேற்றைய வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்களும் பங்கேற்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாசலம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அவர் கூறுகையில்,
“வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகளில் பணம் போடுவது எடுப்பது போன்ற பணிகள் நடைபெறவில்லை. ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கிப் போய் உள்ளது. வங்கி கிளைகள் இடையே நடைபெறும் பண பரிமாற்றம் நடைபெறவில்லை. பெருமளவு காசோலைகள் முடங்கிப் போயுள்ளன.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பது தொழிலாளர்களின் விருப்பமல்ல. அதே சமயத்தில் வாழ்வாதார பிரச்சனைகளுக்காகப் போராடும் நிலைக்கு வரும் போது எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கூறினார்.
சென்னையைப் போன்று திருச்சியிலும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி பொன்மலை ரயில்வே, பணிமனை ரயில்வே சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பணிகள் முற்றிலுமாக முடங்கின. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு காற்றாலை இறகுகளை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் புறப்பட தயாராக இருந்தது. அங்கு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் வேறு நபர்கள் மூலம் கப்பலை வெளியில் எடுத்துச்செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 தொழிலாளர்கள் திடீரென கடலில் குதித்து கப்பலின் முன்புறமும் துறைமுக வாயில் பகுதியிலும் கடலில் மிதந்தபடி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களை கரைக்கு மீட்டு வந்தனர்.

நேற்று பல்வேறு இடங்களிலும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாகவும் வேலைநிறுத்தப் போராட்டம் நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.