• Wed. Apr 24th, 2024

அகில இந்திய சாதனை படைத்த இயக்குநர் ராஜமவுலியின் “ஆர்ஆர்ஆர்”..!

அகில இந்திய அளவில் சாதனை படைத்த இயக்குநர் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தியேட்டர் வசூலிலும் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய சினிமாவில் நடிகர்களை முன்னிலைப்படுத்தித்தான் வியாபாரங்கள், வெற்றிதோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதில் பிரம்மாண்ட இயக்குனர்கள் இணைகிறபோது கூடுதல் வியாபாரம், அதிகபட்ச எதிர்பார்ப்புகள் ஏற்படும். இயக்குனரை முன்னிலைப்படுத்தி ஒரு திரைப்படம் வியாபார தளத்தில் எதிர்பாராத சாதனையை அகில இந்திய அளவில் நிகழ்த்தியுள்ளது. இந்திய சினிமாவில் முதல் முறை என்று கூறலாம் தெலுங்கு இயக்குனராக அறியப்பட்ட ராஜமவுலிதான் இந்த சாதனையை நிகழ்த்தி இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்


ராஜமவுலி இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.


400 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 9ம் தேதி வெளியாக உள்ளது. மிகப் பெரும் எதிர்பார்ப்பை உலக அளவில் ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டமாக டிரைலரை எதிர்பார்க்கின்றனர்.


இதனிடையே, இப்படத்தின் வியாபாரம் மட்டும் மொத்தமாக 900 கோடி ரூபாய் வரை நடந்துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியது. தென்னிந்திய தியேட்டர் வெளியீட்டு உரிமை, வட இந்திய வெளியீட்டு உரிமையாக 500 கோடி, வெளிநாட்டு உரிமையாக 70 கோடி, அனைத்து மொழிகளுக்குமான டிஜிட்டல் உரிமை 170 கோடி, தொலைக்காட்சி உரிமையாக 130 கோடி, இசை உரிமையாக 20 கோடி என மொத்தமாக 890 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த ‘பாகுபலி 2’ படத்தின் உரிமை, வசூல் ஆகியவற்றைக் கணக்கில் வைத்துதான் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கான வியாபாரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரையிலும் வேறு எந்தப் படத்தின் வியாபாரமும் இந்த அளவிற்கு நடந்ததில்லை. மாநில மொழியாக இருக்கும் ஒரு படத்தின் வியாபாரம் இந்திப் படங்களின் வியாபாரத்தை விட அதிகமாக இருப்பதைப் பார்த்து இந்தி திரையுலகம் ஆச்சரியப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் மட்டும் சுமார் 1000 தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது அதுவும் புதிய சாதனைதான். எனவே, தென்னிந்திய மொழி ரசிகர்களை விட ஹிந்தி ரசிகர்களும், இந்தித் திரையுலகினரும் ‘ஆர்ஆர்ஆர்’ டிரைலரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்
திரையரங்கில் படத்தை திரையிடும் உரிமை மட்டும் 570 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த அசல் தொகை கிடைக்க 1300 கோடி ரூபாய் திரையரங்குகள் மூலம் வசூல் ஆகவேண்டும். அதன் பின்னரே 570 கோடி ரூபாய் முதலீட்டுக்கான லாபம் என்ன என்பதை யோசிக்கவே முடியும். வியாபாரத்தில் சாதனை நிகழ்த்திய “ஆர்ஆர்ஆர்” தியேட்டர் வசூலிலும் சாதனை நிகழ்த்துமா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *