சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில், அக்ஷயா அறக்கட்டளையின் வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக லதா சேதுபதி”,”பூச்சி முருகன்”, ஆகிய கலைமாமணிகள் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து, நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக முதியோர்களின் சினிமா பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் வெள்ளி விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், விழா வளாகத்தில் கிளிசோசியம், மெகந்தி உள்ளிட்ட பல்வேறு ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன. இவ்விழாவில் 400-க்கும் மேற்பட்ட முதியோர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்ஷயா அறக்கட்டளையின் நிறுவனர் கோபாலன், “நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்த விழா நடத்தப்படுகிறது. எங்கள் அறக்கட்டளையில் தற்போது 400 முதியவர்கள் உள்ளனர். ஒவ்வொரு முதியவருக்கும் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. மருத்துவச் செலவுகள், அறுவைச் சிகிச்சை, இறுதிச்சடங்கு வரை அனைத்தையும் அறக்கட்டளையே பொறுப்பேற்று செய்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நன்கொடையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.

மேலும், அறக்கட்டளையின் மூலம் ஆங்கிலப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு படிக்க இயலாதவர்களை சேர்த்து கல்வி வழங்குவதுடன், +2 மாணவர்களின் படிப்பு செலவுகளுக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.






