• Tue. May 30th, 2023

அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Byதன பாலன்

Mar 22, 2023

தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. தமிழில் வெளியான இந்த திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்சய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபன்டண்சியா எண்டர்டெய்ன்மென்ட், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் 2 டி எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அருணா பாட்டியா, ஜோதிகா, சூர்யா, விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ‘புரொடக்சன் 27’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த இந்தி திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று ‌உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த அறிவிப்பால் அக்சய் குமாரின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இதனிடையே இந்தி திரையுலகில் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் சூர்யா-ஜோதிகா தம்பதியர், தமிழில் பெற்ற வெற்றியை விட கூடுதலான வெற்றியை பெறுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *