வலிமை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. வலிமை படத்தை போல் இல்லாமல் இந்த படத்தை ஜுலை மாதத்திற்குள் எடுத்து முடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் போனி கபூர் கண்டிப்பாக சொல்லி விட்டதால் படத்தின் வேலைகள் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறதாம். ஷுட்டிங் ஸ்பாட்டில் யாரும் கண்டிப்பாக போன் பயன்படுத்தக் கூடாது என வினோத் கண்டிப்பான கன்டிஷன் போட்டுள்ளதால் தான் படம் பற்றிய எந்த தகவலும் இதுவரை கசியாமல் உள்ளதாம்.
ஏகே 61 படத்தில் அஜித் ஹீரோ-வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்ட கதை. வயதான காலேஜ் ப்ரொஃபோசர் ரோலில் தான் அஜித் நடிக்கிறார். ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார் என்ற விபரங்கள் மட்டும் தான் இது வரை வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை போனி கபூர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம் லைகா ப்ரொடக்ஷன்ஸ் ஏகே 62 படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
தற்போது லேட்டஸ்ட் தகவலாக ஏகே 63 படத்தின் அறிவிப்பும் அஜித் பிறந்த நாளான மே 1 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாம். அஜித்தின் 63 வது படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது கோகுலம் சினிமாஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் சுதா கொங்கரா மற்றும் கேஜிஎஃப் படங்களை இயக்கிய ஹம்பாலே ஃபிலிம்ஸ் இணையும் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.