

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியை பரிசோதிக்க டெல்லி எயம்ஸ் மருத்துவர்கள் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனையில் இருக்கும் அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள், தேவைக்கு ஏற்ப அடுத்தக்கட்ட சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளர்.
இதனிடையே, அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை விரும்பினால் அவர்கள் முடிவு செய்யும் மருத்துவ நிபுணர்கள் குழு செந்தில் பாலாஜியை பரிசோதிக்கலாம். அவரது உடல்நிலையை, சிகிச்சையை ஆராயலாம் என உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஆய்வு செய்ய மத்திய மருத்துவக் குழுவான எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
