அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாகவும் , 90 சதவிகித விசாரணை நிறைவடைந்த நிலையில் அந்த ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மைத்ரேயன்கோரிக்கையை வைத்துள்ளார்.
நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கச் செய்து, ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். சரியாக 100 நாட்களில் ஜெயலலிதாவின் 5 ம் ஆண்டு நினைவுநாள் வருகிறது. அதற்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன் என்றும் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் தெரிவித்தார்.