அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றிருந்த சோழவந்தான் தொகுதியின் முன்னாள் ஏம்எல்ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில், சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், திருப்பூரில் இன்று நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலைமுன்னிலையில், பாஜகவில் இணைந்து கொண்டார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுக வழிகாட்டுதல் குழுவை விரிவிப்படுத்த வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு பேசி வரும் நிலையில், அவரது தீவிர ஆதரவாளரான சோழவந்தான் மாணிக்கம், பாஜகவில் இணைந்துள்ளது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஓபிஎஸ்க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவின் கொடுமையால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனியாக தியானப் போராட்டம் நடத்திய ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்தவர்களில் சோழவந்தான் மாணிக்கமும் ஒருவர்.
அதுபோல, அதிமுக வழிகாட்டுதல் குழுவை சேர்ந்த 11 உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வருபவர் சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம். அவர் திடீரென பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.