• Mon. Apr 29th, 2024

அதிமுக – தேமுதிக இன்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை

Byவிஷா

Mar 14, 2024

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக – தேமுதிக இன்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க. தனது கூட்டணி கட்சிக்கு தொகுதிகளை பங்கீடு செய்துவிட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஆனால் அ.தி.மு.க. இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்து வருகிறது. தே.மு.தி.க.வுடன் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து உள்ளது. ஆனாலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.
பா.ம.க.வை தனது பக்கம் இழுக்க அ.தி.மு.க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் பா.ம.க.வுடன் ரகசியமாக பேசி வருகின்றனர். அதே வேளையில் பா.ஜ.க.வும் பா.ம.க.வை தங்கள் பக்கம் இழுக்க ஒருபுறம் பேச்சு நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தே.மு.தி.க.வுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையை இன்று (வியாழக்கிழமை) நடத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக பா.ம.க.வுடன் ரகசிய பேச்சு நடத்திய அ.தி.மு.க. அதில் முடிவு எட்டாததால் தே.மு.தி.க.வை அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் இன்று மாலை அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் சந்திக்க உள்ளனர். அப்போது தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தே.மு.தி.க. தரப்பில் 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை எம்.பி.யும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
ஆனால் அ.தி.மு.க. 4 தொகுதிகளை மட்டும் ஒதுக்க முன் வருவதாக தெரிவித்தது. மேல்சபை எம்.பி. கொடுக்க இயலாது என்று தெரிவித்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராத நிலையில் தே.மு.தி.க.விற்கு கேட்ட தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி விட்டது. அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு இன்று சுமூகமாக நடைபெற்று இறுதியாகக் கூடிய சூழல் நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *