• Mon. Apr 29th, 2024

22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை.., எஸ்.பி.ஐ பிரமாண பத்திரம் தாக்கல்…

Byவிஷா

Mar 14, 2024

நாடு முழுவதும் கடந்த 5 வருடங்களில் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, எஸ்.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி நேற்று முன்தினம் சமர்ப்பித்தது.
இந்நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை பென் டிரைவில் 2 கோப்புகளாக தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை மத்திய அரசு 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டு வந்தது. ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெற தேவையில்லை.

தேர்தல் பத்திரங்களை பெறும் கட்சிகள், அவற்றை 15 நாட்களுக்குள் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட 22,217 தேர்தல் பத்திரங்களில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவிட்டது. 2019 முதல்வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. இதற்கு ஜூன் 30 வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ மனு தாக்கல் செய்தது.
கடந்த 11-ம் தேதி அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்பிஐயின் கோரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து தள்ளுபடி செய்ததோடு, தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12-ம்தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *