சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள கொத்தங்குளம், குருந்தங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேவியர் தாஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் குருந்தங்குளம் கிராமத்திற்குள் செல்லும்போது அப்பகுதியில் உள்ள வயல் வெளிகளில் ஏராளமான பெண்கள் நாற்று நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட வேட்பாளர் சேவியர்தாஸ் உடனடியாக தனது வாகனத்தை விட்டு இறங்கி சென்று பணியில் இருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் குலவை போட்டு உற்சாக மிகுந்த வரவேற்பு அளித்து மகிழ்ச்சியடைந்தனர்.