அதிமுகவில் இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகளான எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் மக்களவை தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி மக்களவை தொகுதியையும் ஒதுக்கீடு செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 19 ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்து தொகுதிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் கட்சிகளுக்கான இடங்கள் எத்தனை என்பதும், தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை அறிவிக்க அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு அந்தக் கட்சி கேட்டுக் கொண்டதன்படி திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நெல்லை முபாரக் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நேற்று அக்கட்சியினருடன் அதிமுக குழுவினர் ஆலோசனை நடத்தி தொகுதியை இறுதி செய்தனர். அதேபோல அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தாங்கள் போட்டியிடும் தொகுதி குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அந்த கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் இன்றே பேச்சுவார்த்தை நடத்தி அந்தக் கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்த பேசி முடிவெடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.