ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன், பாமக கூட்டணி அமைத்துள்ளதால், அதிருப்தியில் இருக்கும் 34 வன்னியர் அமைப்புகள் அஇஅதிமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பது பாமகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அகில இந்திய வன்னியர் குல சத்திரியர்கள் சங்கம், 34 வன்னியர் அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த தேர்தலில் இவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அமைப்பினர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை அரசு ஆணையாக வெளியிட்டார். அதனால் வன்னியர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் வன்னியர்களின் மிகப்பெரிய கட்சியாக விளங்கக்கூடிய பாமக அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்து விட்டது.
இதற்கு பல்வேறு வன்னியர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜாதிவாரி கணக்கெடுப்பு உட்பட வன்னியர்களுக்கு எதையும் செய்யாத பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ள இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து அதிமுகவுக்கு தங்கள் ஆதரவை அளிப்பதாக முடிவு செய்தனர்.
அதனையடுத்து நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 34 அமைப்புகளின் சார்பில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிமுக முன் வந்திருப்பதாகவும் அதன் தேர்தல் அறிக்கையில் இது குறித்து அறிவிப்பு இடம்பெற உள்ளது என்று தெரிவித்துள்ள இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அதனால் அதிமுகவுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக செய்தியாளர்களிடம் கூறினர். வன்னியர்களின் வாக்குகளை பெற பாமகவை தங்கள் பக்கம் கொண்டு வந்து விட்ட மகிழ்ச்சியில் பாஜக இருக்க, பாமக தவிர்த்த 34 அமைப்புகளைச் சேர்ந்த வன்னியர்கள் அதிமுக பக்கம் சென்றுவிட்டதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.