
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும், அதன்பின் கருணைத்தொகை, ஓய்வூதிய பலன்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்ப்பு முறையை அறிவித்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் நடந்த போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சரான் மாவட்டம் சப்ரா எனும் பகுதியில் பயணிகள் ரயில் பெட்டிக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் இளைஞர்களின் வாழ்க்கைக்கு புதிய பரிமாணத்தையும் அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பொன்னான அடித்தளத்தையும் கொடுக்கும் என அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பிகாரை தொடர்ந்து ஹரியானாவில் வன்முறை அதிகரித்துவருகிறது. போராடும் இளைஞர்கள் அரசு அலுவலகங்கள்,குறிப்பாக ஒன்றிய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்
பல்வால் துணை ஆணையர் அலுவலகம் மீது போராடிய இளைஞர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர்.மேலும் தாக்குதலில் 4 வாகனங்கள் எரிக்கப்பட்டதால் காவல்துறையினர் வான்வழி துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.இதில் 4 பேர் பலியாகி இருக்ககூடும் என தகவல்கள் வந்துள்ளன.
அக்னிபாத் திட்டத்தின் எதிர்ப்பு போராட்டம் மேலும் பல மாநிலங்களில் பெரிய போராட்டமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
