• Sat. Apr 20th, 2024

பயங்கரவாதிகளின் புகலிடமாக மீண்டும் உருமாறும் ஆப்கான்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச பயங்கரவாதியான அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் சந்தித்து பேசியதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதைத் தொடர்ந்து உலக நாடுகளுடனும் நல்லுறவை வளர்க்க முயற்சித்தனர்.

ஆனால் சர்வதேச நாடுகள், ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற அனுமதிக்கக் கூடாது என தாலிபான்களுக்கு நிபந்தனைகள் விதித்து வருகின்றன.

இந்நிலையில் ஆப்கான் நிலவரம் தொடர்பான ஐ.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒசாமா பின்லேடனின் மகன் தாலிபான்களை சந்தித்து பேசினார்;

தாலிபான்கள் வசம் ஆப்கான் மீண்டும் சென்றது குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் என கூறியுள்ளது. ஒசாமா பின்லேடனின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த அமின் முகமது அல்-உஹ் சாம்கானும் ஆப்கானிஸ்தானுக்கே திரும்பிவிட்டதாக ஐநா அறிக்கை கூறுகிறது.

இந்த அமின் முகமது அல்-உஹ் சாம்கான் தற்போதைய அல்கொய்தாவின் தலைவராக செயல்பட்டு வருகிறார் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

அல்கொய்தா இயக்கத்தில் இப்போது 200 முதல் 400 பயங்கரவாதிகள் இருக்கக் கூடும்; ஆப்கான், வங்கதேசம்,இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அல்கொய்தாவில் இணைந்திருக்கின்றனர்;

இருந்தபோதும் அல்கொய்தா இயக்கம் தற்போதைய நிலையில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அமைதி காத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே கிழக்கு ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ்.(கே) பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 4,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தாலிபான்கள் வசம் ஆப்கான் சென்ற நிலையில் ஏராளமான பயங்கரவாதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்களே மீண்டும் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்துள்ளனர் என்கிறது ஐ.நா. அறிக்கை.

ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாத இயக்கங்களில் புகலிடமாக உருமாறியுள்ளது. இது தெற்கு, மத்திய ஆசியா நாடுகளின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவாகி உள்ளது.

குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பேராபத்தாக இந்த பயங்கரவாத இயக்கங்கள் இருக்கின்றன என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *