டில்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், பெரியவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய, குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு செல்வதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. தொடர்ந்து 4 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை, இன்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி, டில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக அரசு கூறினாலும், கடந்த சில வாரங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எதுவும் நடக்கவில்லை, மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, நேரம் மட்டுமே வீணாகிறது. டில்லி அரசு இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காற்று மாசு அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகளை திறந்திருப்பது ஏன்? 3, 4 வயது குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், பெரியவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதிலளித்த டில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘பள்ளிகளை திறக்கவில்லை எனில் குழந்தைகள் கற்பித்தலை மறக்க நேரிடும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். விருப்பப்பட்டால் ஆன்லைன் வாயிலாகவும் பாடங்களை கற்கலாம் எனக் கூறியே பள்ளிகளை திறந்தோம்,’ எனக் கூறினார்.
அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, ‘இதை விருப்பத்திற்கு விட்டுவிட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் யார் வீட்டில் உட்காருவார்கள்? எங்களுக்கும் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். தொற்றுநோய் பரவல் காலத்தின் துவக்கத்திலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு 24 மணிநேரம் அவகாசம் தருகிறோம். அதற்குள் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நாளை கடுமையான நடவடிக்கை எடுப்போம்,’ எனக் காட்டமாக கூறினார்.