• Fri. Mar 29th, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அன்று சென்னை ராயபுரம் பகுதியில், திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு செலுத்த வந்ததாக கூறி, அ.தி.மு.கவினர் பலர் அந்த திமுக நபரை அரைநிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு இருந்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது சட்ட விரோதமாகக் கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட கையோடு, எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினரால் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், “அரசு உத்தரவை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுதல் மற்றும் தொற்றுநோய் பரவ காரணமாக செயல்படுதல்” என தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயக்குமாரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வாக்குப்பதிவு தினத்தன்று திமுகவினர் மீது அதிமுகவினர் கொடுத்த புகார் குறித்து காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிஜெயக்குமார்மற்றும் அதிமுகவினர் பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *