• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஸ்ட்ராங் ரூமில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்

Byவிஷா

May 9, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தேர்தலில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. சில பாதுகாப்பு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சிறிதுநேரம் செயல் இழந்தன. அதேபோல ஈரோடு மற்றும் விழுப்புரம் தொகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் சிறிதுநேரம் செயல் இழந்தன.
கோடை வெப்பம் காரணமாக இந்த கேமராக்கள் செயல் இழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி வெள்ளைஅறிக்கை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், “குறிப்பிட்ட மையங்களில் சிறிது நேரம் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கேமராக்களை பொருத்தி, எந்த பிரச்சினைக்கும் இடம் கொடுக்காத வகையில் பார்த்துக் கொள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும், என்ற மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தேர்தலில் போட்டியிட்ட யாரும் இந்த வழக்கைத் தொடரவில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.