• Mon. May 20th, 2024

25 பேரை பணிநீக்கம் செய்த ஏர் இன்டியா எக்ஸ்பிரஸ்

Byவிஷா

May 9, 2024

ஏர் இன்டியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கேபின் க்ரூ எனப்படும் விமான சிப்பந்திகள் 25 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.
இது தொடர்பாக மின்னஞ்சல் வாயிலாக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “ஊழியர்கள் விடுப்பு எடுத்ததற்கான காரணம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு எவ்வித நியாயமான காரணமும் இன்றி இருக்கிறது. அனைவருக்கும் ஒரே நேரத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போவது என்பது ஏற்பதற்கில்லை. நீங்கள் அனைவரும் விமானப் பயண நேர அட்டவணையை திட்டமிடும் குழுவிடம் கடைசி நேரத்தில் பணிக்கு வரவில்லை என்பதை தெரிவித்ததோடு அதற்கு உடல்நிலையைக் காரணமாகக் கூறியுள்ளீர்கள். மேலும், ஒரே நேரத்தில் விடுப்பு எடுப்பது நிறுவனத்தின் சட்டங்களுக்கு உட்பட்டது இல்லை. அது உங்கள் அனைவருக்கும் பொருந்தும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம் கடந்த 2022-ம் ஆண்டு ஏர் இந்தியா மற்றும் அதன் அங்கமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை வாங்கியது. இதுதவிர, ஏஐஎக்ஸ் கனெக்ட் மற்றும் விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களும் டாடா குழுமம் வசம் உள்ளன.
இந்நிலையில், ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைத்து ஒரு நிறுவனமாகவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏஐஎக்ஸ் கனெக்ட் நிறுவனத்தை இணைத்து ஒரு நிறுவனமாகவும் மாற்றும் நடவடிக்கையை டாடா குழுமம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஊழியர்கள் சமத்துவமாக நடத்தப்படுவது இல்லை என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நிர்வாகத்திடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் ஒரே நேரத்தில், தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் தெரிவித்துவிட்டு விடுப்பு எடுத்தனர். தங்கள் செல்போன்களையும் சுவிட்ச் ஆஃப் செய்தனர். கடைசி நேரத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையங்களில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இந்நிலையில், அதன் ஊழியர்கள் 25 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *