• Sat. Apr 20th, 2024

சிவகாசி அருகே பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி பங்கேற்பு

ByKalamegam Viswanathan

Mar 28, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சல்வார்பட்டி, ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில், மகளிர் மேம்பாடு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ராகவன் தலைமையில், தாளாளர் பிருந்தா ராகவன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி கலந்து கொண்டு பேசினார்.


நடிகை ரோகிணி பேசும்போது, மகளிர் மேம்பாடு என்பது யாரோ உங்களுக்கு தரும் வாய்ப்போ அல்லது சுதந்திரமோ அல்ல. அது உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்வது. சுயமாக நிற்பதற்கு தன்னம்பிக்கை மட்டும் போதாது, அதற்கு நிகரான படிப்பும் மிக அவசியம். கல்லூரி பாடங்களுடன் கலை, இலக்கியம், கவிதை என உங்கள் வாசிப்புத்திறன் தொடர்ந்து இருக்க வேண்டும். கதைகளும், இலங்கியங்களும் கற்பனையாக இருந்தாலும் அவை நமது வாழ்க்கைக்கு நெருக்கமானவை. புத்தகங்கள் படிக்க படிக்க தன்னம்பிக்கை மேம்படும்.

சிறந்த கல்வி கற்றல் மூலம் பொருளாதார மேம்பாட்டையும் அடைய முடியும். சுயமரியாதை, தன்னம்பிக்கை இவை இரண்டும் பெண்களின் மேம்பாட்டிற்கு அவசியமானது. இதனை தருவது கல்வியும், வாசிப்பு திறனும் தான். வெற்றி பெற்ற பெண்கள் எல்லோரும் இதனை கையாண்டவர்கள் என்பது தான் உண்மை. சுயசார்புடன் கல்வி கற்று அனைவரும் மேம்பட வாழ்த்துகள் என்று பேசினார். பின்னர் தாளாளர் பிருந்தா ராகவன் தலைமையில் கல்லூரி வளாகத்தில், நடிகை ரோகிணி மற்றும் மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் நீதிமாணிக்கம் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *