நடிகர் விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் ஜூலை 24ல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
‘அயோக்யா’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். ‘ராணா புரொடக்சன்ஸ்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சமீபத்தில், விஷால் ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பின் போது காயமடைந்தார். காயத்தையும் மீறி அவர் அந்த காட்சியின் நடித்து முடித்தார். காயத்தில் இருந்து மீண்டு வர விஷாலுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவர் சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். லத்தி திரைப்படம் ஆகஸ்ட் 12-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால் படத்தின் ரிலீசை தயாரிப்பாளர்கள் செப்டம்பர் 15-ம்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். லத்தி திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அந்த வீடியோவின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த போலீஸ் கதாபாத்திரங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் வருகிற 24-ந்தேதி வெளியாக உள்ளது.