கோவாவில் இருந்து முதல் ஆஸ்தா ரயில் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் 2000 பக்தர்கள் பயணம் செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை முன்னிட்டு, இந்திய ரயில்வே நாட்டின் பல நகரங்களில் இருந்து, அயோத்திக்கு 200-க்கும் மேற்பட்ட ஆஸ்தா சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதில் படுக்கை வசதி கொண்ட 20 ரயில் பெட்டிகள் உள்ளன. இந்நிலையில் கோவாவில் இருந்து முதல் ஆஸ்தா ரயில் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கலந்து கொண்டு பேசியதாவது:
கோவாவில் இருந்து முதல் ஆஸ்தா ரயில் புறப்பட்டுள்ளது. பாஜக ஏற்பாடு செய்துள்ள இந்தரயிலில் கோவா மக்கள் சுமார் 2,000 பேர் அயோத்தி செல்கின்றனர். 15-ம் தேதியன்று கோவா அமைச்சரவையில் உள்ள அனைவரும், கோவா மக்களுடன் பால ராமர் கோயிலுக்கு செல்கிறோம். கோவா மக்களுடன் முதல் முறையாக பால ராமர் கோயிலுக்கு செல்வது நமது அதிர்ஷ்டம். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் சூரத், ஜலந்தர் போன்ற நகரங்களில் இருந்தும் ஆஸ்தா ரயில் அயோத்தி சென்றுள்ளது.