தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை காணிக்கையாக வைத்து பொதுமக்கள் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள். ஆடு மற்றும் சேவல்களை அறுத்து படையல் வைத்து அசைவ உணவுடன் அன்னதான நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் வருடம் தோறும் ஆடிப்பெரும் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த வருட ஆடி பெரும் திருவிழா கடந்த ஆடி மாதம் 2ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் ஆடி மாத சனிக்கிழமை தினங்களில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் சுரபி நதியில் நீராடி எல் தீபம் ஏற்றியதுடன், உப்பு பொரியுடன் சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் மண் காகத்தினை வைத்து தோஷங்களை நிவர்த்தி செய்து வந்தனர்.
இந்த வருட ஆடி மாத பெருந் திருவிழாவின் நிறைவு நாளான இன்று சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சோனை கருப்பசாமி நீண்ட கால வேண்டுதல்களை நிறைவேற்றியதற்காக மதுவினை வைத்து இறை வழிபாடு செய்கின்றோம் என வேண்டியும், நீண்ட கால ஆசையை கருப்பசாமி நிறைவேற்றியதற்காக காணிக்கை வைப்பதாகவும் ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை பொதுமக்கள் காணிக்கையாக வைத்து இறைவழிபாடுகளை செய்தனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டு வந்த 1750 மது பாட்டில்களை இந்து சமய அறநிலையத் துறையினர் அவர்களின் பெயர்களை பதிவு செய்து கொண்டு சேகரித்து கருப்பசாமி திரு உருவச் சிலையின் உச்சகால பூஜைக்கு வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரிகள் மது அபிஷேக விசேஷ பூஜைகளை நடத்தினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு 26 சேவல் மற்றும் 43 ஆடுகள் பலியிடப்பட்டு, அசைவ உணவுகளை அன்னதானமாக வழங்கினார்கள்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)