• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாரியம்மன் கோவிலில் ஆடி மாத விளக்கு பூஜை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடி மாதங்களில் அதிக அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

சங்கரன்கோவில் தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கருவலம்,புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாகவும் அம்மனை தரிசனம் செய்ய வருவார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்னிச்சட்டி ஆயிரம்கண் பானை, மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக் கடன்களை செலுத்துவர்.

மேலும் இக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது..

ஆடி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர், உள்ளிட்ட 21 வகை வாசனை மற்றும் திவ்ய பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இருக்கன்குடி மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.

பெளர்ணமியை முன்னிட்டு திருக்கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பெண்கள் விளக்கு ஏற்றி அம்மன் பாடல்கள் பாடி பக்தியுடன் பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அம்மன் பாடல்கள் பாடும் போது ஏராளமான பெண்கள் அருள் வந்து ஆடினர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு சேலை பிரசாதம் மற்றும் விளக்கு பூஜை பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த இருக்கன்குடி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவிளக்கு பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். திருவிளக்கு பூஜை கோவில் இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.