• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிறப்பு சான்றிதழாக ஆதாரை ஏற்றுக் கொள்ள முடியாது..!

Byவிஷா

Jan 18, 2024

பிஎப், இபிஎப்ஓ கணக்குகள் என பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அடையாள அட்டையை பிறப்புச் சான்றுக்கான ஆவணமாக ஏற்க வேண்டாம் என வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) , இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது.
பிறப்பு சான்றாக (DOB) ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, அனைத்து சேவைகளுக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. பணியில் சேர்வதில் தொடங்கி வங்கிகளில் கணக்கு தொடங்குவது, பிஎப், இபிஎப்ஓ கணக்குகள் என அனைத்திலும் ஆதார் தவிர்க்கமுடியாத ஆவணமாக உள்ளது.
இதுபோன்று பல்வேறு சேவைகளுக்கு ஆதார், பிறப்புச் சான்று ஆவணமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், இனி ஆதார் அடையாள அட்டையை பிறப்புச் சான்றுக்கான ஆவணமாக ஏற்க வேண்டாம் என வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு, இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள EPFO அமைப்புக்கு, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, பிறந்த தேதிக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதார் அட்டையை நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டம் 20216-ன் கீழ், தனிநபரின் தனித்துவ அடையாளத்துக்காக ஆதார் பயன்படும்போது, பிறந்த தேதிக்கான சான்றாக அவை தகுதி பெறாது என்ற வலியுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஆதார் அட்டை ஒருவரது அடையாளத்திற்கான சரிபார்ப்புக்கு பயன்பட்டாலும், பிறப்புச் சான்று அல்ல என்று UIDAI கூறியுள்ளது. இதன் காரணமாகவே பிறந்த தேதியை உறுதி செய்வதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆதார் நீக்கப்பட்டுள்ளது. மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரின் (CPFC) ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

EPFO ஏற்றுக்கொள்ளக்கூடிய பிறந்த தேதி ஆதாரம்:

பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
அங்கீகரிக்கப்பட்ட அரசு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியல் பள்ளியிலிருந்து வெளியேறும் சான்றிதழ், பான் கார்டு
மத்திய/மாநில ஓய்வூதியம் செலுத்தும் ஆணை அரசால் வழங்கப்படும் வீட்டுச் சான்றிதழ் உள்ளிட்டவைகள் ஆகும்.