

போலீசார் சோதனை செய்வதை பார்த்ததும், கஞ்சா மூட்டையை கோவை ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் போட்டு விட்டு சென்றார். போலீசார் கஞ்சா மூட்டையை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன.
ரயில்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கோவை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் அடிக்கடி ரயில் நிலையம் மற்றும் ரயில் பெட்டிகளில் சோதனை செய்து வருகிறார்கள்.
ரயிலில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்கள் கடத்தி வந்தால் அவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.5 மணிக்கு ரயில்வே போலீசார் மற்றும் கோவை மாநகர மதுவிலக்கு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சந்தேகத்திற்கு இடமாக வரும் பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். இந்த நிலையில் போலீசார் சோதனை செய்வதை பார்த்த கடத்தல் ஆசாமி வாலிபர் ஒருவர் ரயில்வே ஜங்ஷன் 1 வது பிளாட்பாரம் வழியாக வந்த போது, அங்கேயே அவர் வைத்து இருந்த மூட்டையை போட்டு விட்டு ஓடிவிட்டார். அதை போலீசார் கைப்பற்றி சோதனை செய்த போது, அதில் 8. 100 கிராம் கஞ்சா இருந்தது. உடனே அதை கைப்பற்றிய போலீசார் அதை போட்டுவிட்டு சென்ற வாலிபர் யார் ? என கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை செய்து வருகிறார்கள். இதனால் கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

