• Fri. Apr 26th, 2024

மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்

Byp Kumar

Mar 30, 2023

குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று நடைபெற்றது
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986 இன் படி குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று நடைபெற்றது
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்த பயிற்சி முகாமை ஆட்சியர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து உரையாற்றினார். பயிற்சி முகாமில் மதுரை மற்றும் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள், மதுரை நெல்லை மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய் துறை, சமூக பாதுகாப்பு இயக்குனரகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து இப்பயிற்சி முகாம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மண்டல தொழிலாளர் நல இணை ஆணையாளர் சுப்பிரமணியன் வரும் 2025 டிசம்பர் 31 க்குள் ஒரு குழந்தை தொழிலாளர்கள் கூட இருக்கக் கூடாது என மாநில அரசு மாநில செயல்திட்டமும், மாநில செயலாக்க நடைமுறைகளும் அமல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது என்றும் அதற்கான தொடர் நடவடிக்கைகள் துறை சார்பில் எடுக்கபட்டு வரும் நிலையில் இது தொடர்பான அலுவலர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
குழந்தை தொழிலாளர்களுக்கு உருவாவதற்கு காரணம் வறுமை என்பதால் வறுமையை ஒழித்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக தான் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் மதுரை மண்டலத்தில் 100 குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் மீட்டெடுக்கப்பட்டு அவர்களின் பெற்றோர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது என்றும், அந்த குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மதுரை மண்டல தொழிலாளர் நல இணை ஆணையாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *