

தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் கூகுள் மேப்பை நம்பி காரை இயக்க, அது தொங்குபாலத்தில் மாட்டிக் கொள்ள, பின்னர் அந்தப் பெண் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நண்பரை சந்திப்பதற்காக ஹோண்டா செடான் காரில் தனியாக பயணம் செய்துள்ளார். இவர் சுங் மென் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். நண்பரின் வீட்டிற்கு செல்ல வழி தெரியாத காரணத்தால் அவரது லோகேஷனை பகிருமாறு கேட்டுக் கொண்டார். அந்த நண்பரும் பகிர்ந்திருக்கிறார். பின்னர் அந்த லோகேஷனை நோக்கி பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் வியாங் தாங் பாலத்தின் வழியாக செல்ல வேண்டும் என்று ஜிபிஎஸ் சிக்னல் காட்டியுள்ளது.. இதனால் பாலத்திற்குள் காரை ஓட்டி சென்றுள்ளார். அதன்பிறகு தான் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பாலம் தொங்கும் பாலம். பொதுமக்கள் நடப்பதற்கே பயப்படும் சூழலில் இவர் காரை ஓட்டி சென்று மாட்டிக் கொண்டார். சுமார் 15 மீட்டர் தூரம் சென்ற நிலையில், காரை அதற்கு மேல் இயக்க முடியவில்லை. 120 அடி உயரத்தில் பெண் ஒருவர் காருக்குள் தனியாக சிக்கி கொண்டார்.
அப்போது அந்த பகுதி வழியாக சென்று கொண்டிருந்த மகுன் இஞ்சான் என்ற நபர் கவனித்துள்ளார். ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து அவசர உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார்.உடனே மீட்பு படையினர் விரைந்து வந்தனர். முதலில் அந்த பெண்ணை காப்பாற்றிய மீட்பு படையினர், அதன்பிறகு காரை படிப்படியாக வெளியே கொண்டு வந்தனர்.

