• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மதுரையில் கோஷ்டி மோதலில் ரவுடி வெட்டிக்கொலை.!!

ByKalamegam Viswanathan

May 20, 2023

மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் பாபி கார்த்திக் (வயது 35). இவர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி ராமர் பாண்டியனுக்கும், பாபி கார்த்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டனர். சம்பவத்தன்று ராமர் பாண்டியன் ஆதரவாளர் காளி என்பவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த பாபி கார்த்திக் மற்றும் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் ஆத்திரமடைந்த ராமர் பாண்டியன் மற்றும் சிலர் பாபி கார்த்திகை கொலை செய்ய திட்டமிட்டனர்
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பாபி கார்த்திக் தனது வீட்டின் அருகே மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமர் பாண்டியன் உள்பட 14 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 பேருக்கும் பிரச்சினை முற்றவே ராமர் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் பாபி கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர் ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று வெட்டி கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த கொலை குறித்து தகவலறிந்த தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான பாபி கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கொலையில் தொடர்புடைய தனசேகரன், வேல்பிரதாப், சுந்தர பாண்டி, பாலமுரளி மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராமர் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..