ஆஸ்கர் விருது விழாவில் தனது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்த நிலையில், ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்கர் குழு 10 ஆண்டுகளுக்கு வில் ஸ்மித்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. தனது தவறை உணர்ந்த வில் ஸ்மித் ஆஸ்கர் உறுப்பினர் பதவியை அவரே முன் வந்து ராஜினாமா செய்திருந்தார். நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வில் ஸ்மித் நடிக்கவிருந்த சில படங்களும் அந்த பிரச்சனை காரணமாக அவர் கையை விட்டுப் போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது வில் ஸ்மித் உடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இருக்கும் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. மேலும், சமீபத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றன. ஆனால், உண்மையில், இந்த புகைப்படங்கள் கடந்த 2018ல் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள ஹீரோபன்டி 2 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக சமீபத்தில் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, இந்த புகைப்படங்களை காட்டி, ஏ.ஆர். ரஹ்மானிடம் கேள்வி எழுப்பும் போது, வில் ஸ்மித் ரொம்பவே அன்பான உள்ளம் கொண்டவர் என ரஹ்மான் கூறியுள்ளார்.