• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

Byவிஷா

Jun 4, 2024

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு பகுஜன்திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கத்தியுடன் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் இன்று காலை துவங்கியது. கடும் சோதனைக்கு பின்னர் வாக்காளர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், மற்றும் சுயேச்சைகள் உட்பட 22 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் காலை 8.15 மணியளவில் பகுஜன் திராவிடர் கழகம் சார்பில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜன்சிங் (61) என்பவர் இடுப்பில் கத்தியுடன் வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலை கடந்து வந்தார். அப்போது போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்வதற்கு அவருக்கு தடை விதித்தனர். இதனால் அவர் போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், “திருநெல்வேலியில் தற்போது குடியிருக்கும் நான், கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறேன். எங்களது சிங் சமூக மரபுப்படி எப்போதும், உறையுடன் கூடிய கத்தியை இடுப்பில் வைத்திருப்போம். அது அரசு நிகழ்ச்சி, மற்றும் பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் மாற்றமில்லை. இதைப்போல் தேர்தல் நடத்தையிலும், எங்களது பாதுகாப்பு உபகரணங்களை உடலுடன் சேர்த்து அணிவதற்கான அனுமதி உள்ளது. வடமாநிலங்களில் உள்ள சிங் வேட்பாளர்கள் இதை பின்பற்றி வருகின்றனர். ஆனால், குமரி வாக்கு எண்ணும் மையத்தில் என்னை அனுமதிக்காதது வேதனை அளிக்கிறது. இதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்” என்றார். இருந்தபோதும் போலீஸார் ராஜன்சிங்கை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேற்றி விசாரணை நடத்தினர்.