• Sat. May 11th, 2024

பிப்.5ல் இசைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையில் இசைவிழா

Byவிஷா

Feb 3, 2024

சென்னையை இசை நகரமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினை கொண்டாடும் வகையில், கலை பண்பாட்டுத்துறை சார்பில் பிப்ரவரி 5 ம் தேதி சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இசை விழா நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 5ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு தவில் வலயப்பட்டி வழங்கும் நாதஸ்வர தவிலிசை நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் டி.பாலாஜி குழுவினர் நாதஸ்வரம். பத்மஸ்ரீ விருது பெற்ற, கலைமாமணி, சங்கீத கலாநிதி வலயப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம் சிறப்பு தவில் இசைக்க உள்ளனர். பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சசாங் சுப்பிரமணியம் குழுவினரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அபிஷேக் ரகுராம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளது. மேலும் மாலை 4.30 மணிக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழா பேரூரையாற்றி ஓவிய, சிற்பக்கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்க உள்ளனர்.
தமிழகம் முழுவதும் இளம் கலைஞர்களுக்கு குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய கலைகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 15 இளம் கலைஞர்களுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளனர். இந்நிகழ்வில் கலைஇயக்குநர் பண்பாட்டுத்துறை சே.ரா.காந்தி வரவேற்புரை நிகழ்த்துக்கிறார். தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் வாகை.சந்திரசேகர், டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் எஸ்.சௌம்யா, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன், தமிழ்நாடு அரசு இசைப்பள்ளிகளின் கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் அனைவரும் வாழ்த்துரை வழங்குகின்றனர். கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் க.சிவசௌந்திரவல்லி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *