• Mon. Apr 29th, 2024

தாய்லாந்தில் ஓர் அதிசய காட்டுக்கோவில்..!

Byவிஷா

Oct 30, 2023

தாய்லாந்தில் முழுவதும் பீர்பாட்டில்களால் உருவான காட்டுக்கோவில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது.
தாய்லாந்து செல்பவர்கள் சென்று வரவேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தாய்லாந்தின் ஆஃப்பீட் இடங்களில் இந்த கோவில் ஒன்றாகும். மில்லியன் பாட்டில்களின் கோவில் என்று அழைக்கப்படுகிறது இந்த காட்டுக்கோவில்! கோவில் என்றால் கடவுள் இருக்கணுமே என்கிறீர்களா? ஆம் 15 லட்சம் பீர் பாட்டில்களால் ஆன இந்த கோவிலில் புத்தர் சாந்தமாக வீற்றிருக்கிறார். தாய்லாந்து சிசாகெட் மாகாணத்தின் குன் ஹன் மாவட்டத்தில் இருக்கிறது இந்த காட்டுக்கோவில். 1984 முதல் புத்த துறவிகள் சேகரித்த காலி பீர் பாட்டில்களே இங்கு இருக்கின்றன.
இந்த கோவில் ஒரு வழிபாட்டுத்தலமாக மட்டுமில்லாமல் மறுபயன்பாட்டை ஊக்குவிப்பதாகவும் மனித படைப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.

மில்லியன் பாட்டில்களின் கோவில் என்றால் வெறும் பாட்டில்களால் உருவான கோவில் என நினைத்துக்கொள்ள வேண்டாம். கான்கிரீட், கம்பி எல்லாம் கொண்டு கட்டப்பட்டதுதான் இந்த கோவிலும். ஆனால் பாட்டிகளும் பாட்டில் மூடியும் கட்டுமானத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ளதை நீங்கள் படத்தில் பார்க்கலாம்.
பாட்டில்கள் கச்சிதமாக அமைக்கப்பட்டு, கோவிலின் சுவர்கள் மற்றும் தூண்களின் கான்கிரீட்டில் பதிக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். மறுபயன்பாடு மூலம் குப்பை சேருவதை மட்டும் இந்த கோவில் தடுக்கவில்லை, பாட்டில் கோவிலை உருவாக்கும் புத்திசாலித்தனமான சிந்தனை அதிஅற்புதமான கட்டிடக்கலையை நமக்குக் கொடுத்துள்ளது.
குறிப்பாக இந்த வண்ணமயமான பாட்டில்களில் சூரிய ஒளிப்பட்டு சிதறி, உன்னதமான காட்சியை வழங்கும். நம் கண்கள் பாக்கியம் செய்திருந்தால் நிச்சயமாக இந்த கோவிலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்.

15 லட்சம் பாட்டில்களை இங்குள்ள புத்த துறவிகள் சேகரித்ததை நினைக்கும் போதே மலைக்க வைக்கிறது. இதற்காக துறவிகள் உள்ளூர் நிர்வாகத்திலும் சுற்றுலாப்பயணிகளிடமும் உதவி கேட்டுள்ளனர்.
இப்போது சுற்றுலாப்பயணிகளின் பெரும் வரவேற்பை இந்த கோவில் பெற்றுள்ளது. குறிப்பாக குப்பைகளை சேர்க்காத பிளாஸ்டிக்குகளை தூக்கி வீசாத பொறுப்பான சுற்றுலாப்பயணிகள் இந்த கோவிலை பார்வையிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த கோவிலில் இருக்கும் வேண்டுதல் அறைகள், பொது குளியலறை, தண்ணீர் தொட்டி முதல் சுடுகாடு வரை எல்லாமும் பாட்டில்களால் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய காலக்கட்டத்தில் எளிதாக கிடைப்பதனால் கோவில் கட்டுவதில் பீர் பாட்டில்களுக்கு பஞ்சமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *