



கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சிறுவாணி அணை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன அதில் தலைமுறை தலைமுறைகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வப்போது வனவிலங்குகள் அங்கு பழங்குடியினர் வாழும் கிராமங்களுக்கு அடிக்கடி வந்து செல்லும், மேலும் அங்கு வரும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி செல்லும். இந்நிலையில் கடந்த ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக அங்கு இருந்த வனவிலங்குகள் கோவை தொண்டமுத்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்குள் முகாமிட்டுக் கொண்டு அங்கு உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் வைத்திருக்கும் உணவு மற்றும் தீவனங்களை தின்று சேதத்தை ஏற்படுத்திச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்ததால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகளும் யானைகளும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டன.
இந்நிலையில் நேற்று வெள்ளியங்கிரி பகுதியில் குடிநீர் தொட்டி மற்றும் குப்பை தொட்டிகளில் இருந்த உணவுகளை யானை பரிதாபமாக தின்று செல்போன் காட்சிகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கோவை குற்றாலம், சாடிவயல் பகுதியில் உள்ள ஒரு பழங்குடியினர் கிராமத்திற்குள் நுழைய முயன்ற ஒற்றை காட்டு யானையைக் கண்ட அங்கு குடியிருக்கும் பழங்குடியின மக்கள் கூச்சலிட்டு, சத்தம் போட்டதால் யானை அங்கு இருந்து வனப் பகுதிக்குள் சென்றது. இதனை அங்கு இருந்த பழங்குடியினர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார் அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் யானைகள் தொடர்ந்து கிராமப் பகுதிக்குள் உணவு தேடி புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் என அச்சத்துடன் உயிர் பயத்தில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு வனத்துறை உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

