• Fri. May 3rd, 2024

லட்சங்களில் பரிசுகள் வெல்ல கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு!

ByKalamegam Viswanathan

Aug 10, 2023

‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடக்கம், மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் வரும் 12-ம் தேதி துவங்க உள்ளன. ஆதியோகி முன்பு பிரமாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இதில் ‘ஈஷா கிராமோத்சவம்’ குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி நகுஜா அவர்கள் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விதமாக ‘ஈஷா கிராமோத்சவம்’ என்ற கிராமிய விளையாட்டு திருவிழாவை சத்குரு அவர்கள் 2004-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். வெறும் 4 தாலுக்காவில் மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறும் அளவிற்கு பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்தாண்டு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நடைபெறும் இப்போட்டிகளில் 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 150 கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட அணிகளும், 2,600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இத்திருவிழாவில் ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால், இருபாலருக்குமான கபாடி போட்டிகள் என 4 போட்டிகள் பிரதானமாக நடத்தப்படும். பல்கலைக்கழக வீரர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் வீரர்கள், தொழில் முறை வீரர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.

முழுக்க முழுக்க கிராமப்புற மக்களுக்காக இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 14 வயதை கண்ட கிராமப்புற மக்கள் தங்கள் கிராமத்தில் ஒரு அணியை உருவாக்கி இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

ஆக.12-ம் தேதி தொடங்கி செப்.23-ம் தேதி வரை கிளெஸ்டர், டிவிஸினல், பைனல் என 3 கட்டங்களாக நடத்தப்படும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகைகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். இறுதிப் போட்டிகள் சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ஆதியோகி முன்பு மிக பிரமாண்டமாக நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு வாலிபால் (ஆண்கள்) – ரூ.5 லட்சம், த்ரோபால் (பெண்கள்) – ரூ. 2 லட்சம், கபாடி (ஆண்கள்) – ரூ.5 லட்சம், கபாடி (பெண்கள்) – ரூ.2 லட்சம் பரிசு தொகைகள் வழங்கப்படும். மேலும், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அணியில் இடம்பெறாத மக்கள் பங்கேற்று மகிழ்வதற்காக பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் https://isha.co/gramotsavam-tamil என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.

இத்திருவிழாவை நடத்தும் ஈஷா அவுட்ரீச் அமைப்பு, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறையிடம் இருந்து தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு (National Sports Promotion Organization) என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு ‘ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்’ என்ற உயரிய விருதை அப்போதைய மாண்புமிகு பாரத குடியரசு தலைவர், ஈஷா அவுட்ரீச்சிற்கு வழங்கி கெளரவித்துள்ளார். மேலும், இத்திருவிழாவின் இறுதிப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ், பி.வி.சிந்து, ஷிகர் தவான், வீரேந்திர சேவாக் போன்ற விளையாட்டு துறை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *