புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த பெண்மணி ஒருவர், அவர் கருவுற்ற செப்டம்பர் 2021 முதல் பிரசவம் வரையிலும் தஞ்சாவூரில் உள்ள அவர்லேடி என்ற தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
மேலும் கர்ப்ப காலத்தில் அவர்லேடி மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஒரு Review – கூட புறக்கணிக்காமல், எந்தவொரு காலதாமதமும் இன்றி அனைத்து வகையான ஸ்கேன்கள், ரத்தப்பரிசோதனைகள் மரபணு பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளையும் முழுமையாக செய்துள்ளார்.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அனைத்து பரிசோதனை முடிவுகளிலும் கருவில் இருந்த குழந்தைக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்றும், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் சான்று அளிக்கப்பட்டு பிரசவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தை பிறந்து பிறகு போதிய வளர்ச்சி இல்லாத காரணத்தால், மூளை நரம்பியல் மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி குழந்தைக்கு மரபணு நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மரபணு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், தஞ்சாவூர் அவர்லேடி மருத்துவமனையை அணுகி விளக்கம் கேட்டபோது, மிகுந்த அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், தஞ்சாவூர் அவர்லேடி மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். மேலும் தஞ்சாவூர் அவர்லேடி மருத்துவமனையில் பணம் செலுத்தியதற்கான ரசீதுகள் மற்றும் அவர்லேடி மருத்துவமனை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் குழந்தையின் பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் வழக்கு விசாரணை நடபெற்றது.
இவ்வழக்கில் தஞ்சாவூர் அவர்லேடி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதில் பணிபுரியும் மருத்துவர்களான மனோசித்ரா, ஜீனத் மற்றும் தவறான பரிசோதனை அறிக்கை அளித்த பரிசோதனை மையம் ஆகியோரின் மருத்துவ அலட்சியமே, கருவில் இருந்த குழந்தைக்கு நோய் பாதிப்பு கண்டறியப்படாமல் போனதற்கு காரணம் என்ற மனுதாரர் தரப்பு வாதம் மூலம் நிரூபிக்கப்பட்டது.

மேலும் இரு தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் சேகர் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நஷ்ட ஈடாக ரூ 75 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தஞ்சாவூர் அவர்லேடி மருத்துவமனைக்கு எதிராக அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பு தனியார் மருத்துவமனை வட்டாங்கரங்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.













; ?>)
; ?>)
; ?>)