தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரை மத்திய மாவட்டத்தில் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சி பதவிக்கு பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையை சேர்ந்த எம்எல்ஏவின் உதவியாளர் கனி என்பவர் பேசுவதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு சமீபத்தில் புதிய மாவட்டமாக மதுரை மத்திய மாவட்டம் பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் கட்சியில் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கட்சி பதவிக்கு பேரம் பேசப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த சூழலில் மதுரையை சேர்ந்த எம்எல்ஏவின் உதவியாளராக இருக்கும் கனி என்ற பெயருடைய நபர், கட்சி நிர்வாகி ஒருவரிடம் கட்சி பதவிக்கு பல லட்சம் ரூபாய் கேட்டு பேரம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில் கனி என்பவர் மற்றொரு நபரிடம் பேசும்போது,
“எத்தனை மணிக்கு கிளம்புறீங்க.. சேப்பாக்கம் வந்துருங்க.. அமௌண்டை கையில் கொண்டு வந்துருங்க.. அவர் முன்னால வச்சுதான் பேசப்போறேன். 20-ம் தேதி 10 லட்சம் ரூபாய் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. முதலில் 5 லட்சம், பின்னர் 10 லட்சம் தர வேண்டும். மறுவரையறை வந்தவுடன் எந்த வார்டுன்னு பேசிக்கிருவோம்”
“இப்போதான் உதயசூரியன், ஆதவ் வந்துருக்காரு. ரூம் போட்டு கொடுத்து வந்துருக்கேன். உங்களுக்குனு ஒரு மரியாதை, ரெஸ்பெக்ட் இருக்கும். இதுவரை உங்களிடம் நடித்தது கிடையாது. ஓபன் தான்”
என பேசுவது போல் பதிவாகியுள்ளது.
மேலும் பேசிய போது “எந்த காரில் வருவீங்க.. இருங்க தனபாண்டியன் அண்ணனிடம் தருகிறேன்” என கூறி போனை மற்றொரு நபரிடம் கொடுக்கிறார். அப்போது பேசிய நபர்,
“கேம் விளையாடல, சீட்டு விளையாடிகிட்டு இருக்கோம். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம். தனித்துவமாக அரசியல் பண்ணுங்க, கூட்டு வேண்டாம்னே. அவர்கள் நம்பிக்கை துரோகிகள், உங்களை 100% நம்புவேன்”

என பேசும் உரையாடலும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.
மதுரையை சேர்ந்த எம்எல்ஏவின் ஆதரவாளர் பேசியதாக கூறப்படும் இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை சத்தியம் தொலைக்காட்சி சார்பாக உறுதி செய்யப்படவில்லை. சமூக வலைதளங்களில் இந்த ஆடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த ஆடியோ உண்மையாக இருந்தால் ஆளும் தவெக கட்சி நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் மக்களுடைய கேள்வியாக உள்ளது. சமீப காலங்களாக இது போன்ற ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், இதன் உண்மைத்தன்மையை விசாரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.



