தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த 66 வயது பெண் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இதன் மூலம் 4 பேர் பயனடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த பரமசிவத்தின் மனைவி லட்சுமி (66). இவர் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு 8 மணியளவில் எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்தார். இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக, அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை 1.25 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டார்.
தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுயநினைவின்றி இருந்த அவருக்கு, அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 14-ஆம் தேதி காலை 10.38 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, அவரது மகன் ராஜேஷ்குமார், தாயின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தார். இதனைத் தொடர்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் உடல் உறுப்புகள் தானம் பெறும் பணி நடைபெற்றது.
சிறுநீரகங்கள், கருவிழிகள் தானம்
லட்சுமியிடமிருந்து பெறப்பட்ட இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், மற்றொன்று திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. மேலும், இரண்டு கருவிழிகளும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அலுவலர் கேப்டன் டாக்டர் சரவணன் கூறுகையில், இந்த உடல் உறுப்பு தானம் மூலம் சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படும் இருவர் உள்பட மொத்தம் 4 பேர் பயனடைந்துள்ளனர். உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்த லட்சுமியின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை நிர்வாகம் நன்றி தெரிவித்ததுடன், மறைந்தவரின் ஆன்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தியது.
மேலும், உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்கான சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற உதவிய மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் ஆகியோருக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நன்றி’ என்றார்.



