• Sun. Mar 16th, 2025

தேனியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒரு நாள் இன்பச்சுற்றுலா

ByI.Sekar

Mar 1, 2024

தேனி மாவட்டம், தேனியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒரு நாள் இன்பச்சுற்றுலாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, சுற்றுலாத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றிய மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெற்றோருடன் இணைந்து செல்லும் ஒரு நாள் இன்பச்சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.விஷஜீவனா. கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை மகிழ்விக்க இன்பச்சுற்றுலா அழைத்துச் செல்லும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளை இன்பச்சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும்போது, மன அழுத்தம் குறைந்து, புத்துணர்ச்சியும், மனமகிழ்வும் ஏற்படும். மேலும், குழந்தைகள் புது இடங்களை காணும்போது, அவர்களுக்கு மூளையின் செயல்திறன் அதிகரிக்கவும் செயலாற்றல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒரு நாள் மன மகிழ்வுடன் சென்று வருவது பெற்றோர்களின் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.
அதன்படி, 25 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மார்கள், சிறப்பாசிரியர்கள், குழந்தை பராமரிப்பாளர்கள் மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 59 பேர் தேனி மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளங்களான வீரபாண்டி பகுதி, சுருளி அருவி பகுதி. சின்னமனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு மாலை 05.00 மணிக்கு மீண்டும் மாவட்ட ஆட்சியரகம் வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு சிற்றுண்டி குடிநீர், மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, சுற்றுலா அலுவலர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.