பல்லடம் அருகே இரவு நேரங்களில் மரங்களைத் தேடிச் சென்று ஆசிட்டை ஊற்றும் கொடூர மனிதரால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதி பாளையத்தில் வசிப்பவர் சதாசிவம். இவரது வீட்டின் முன் சாலையின் இருபுறமும் மரங்கள் வளர்ந்துள்ளன. வழக்கம் போல் சதாசிவம் காலையில் எழுந்து வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மரங்களை சுற்றி தண்ணீர் ஊற்றியது போல் ஈரமாக இருந்தது. இரவில் வந்து மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சியது யார்? இதற்கு முன் இப்படி நடந்ததில்லை என சதாசிவம் சந்தேகம் அடைந்தார்.
இதனால், ஈரம் என்னவென்று பார்க்க அருகில் சென்றவர் அதிர்ச்சியடைந்தார். மரங்களை சுற்றி ஆசிட் ஊற்றப்பட்டது. மரங்களின் மீது ஆசிட் ஊற்றினால் அவை அழுகிவிடும் என்பதை அறிந்து யாரோ வேண்டுமென்றே இதை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பதறி சதாசிவம் ஆய்வு செய்தார்.
நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் புகுந்து மரங்களை சுற்றி ஆசிட் ஊற்றியது தெளிவாக பதிவாகி இருந்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபரைத் தேடி வருகின்றனர். ஏற்கனவே சாலை பணிக்காக மரங்களை வெட்ட ஊராட்சி நிர்வாகம் முயற்சித்ததாகவும், இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரவில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசிட் ஊற்றப்பட்டது தெரியவந்தது. ஊராட்சி நிர்வாகம் முயற்சி செய்கிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால், மரங்களில் ஆசிட் ஊற்றிய நபர் பிடிபட்ட பிறகுதான் காரணம் தெரிய வரும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.